AD

இசைக்குழு லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் தற்கொலை

பிரபல இசைக்கச்சேரி குழுவான லக்ஷ்மன் சுருதியின் உரிமையாளர்களில் ஒருவரான ராமன், தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இசை கச்சேரிக்கு பெயர்பெற்ற லக்ஷ்மன் சுருதி குழுவின் உரிமையாளர்களாக இரட்டையாளர்களான ராமன் - லஷ்மன் இருந்தனர். இருவரும் கல்லூரி நாட்களில் தொடங்கிய இந்த குழு பின்னாளில் பல பின்னணி பாடகர்களை அடையாளம் காட்டும் அளவிற்கு வளர்ந்தது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்று வரும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் ராமன் நேற்று மாலை சென்றுள்ளார். இதில் ராமன் மட்டும் பாதியிலேயே வீட்டிற்கு திரும்பிவிட்டார். இரவு 9 மணியளவில் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த போது அவரது அறையில் தூக்கிட்ட நிலையில் ராமன் சடலமாக தொங்கியுள்ளார்.

அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தற்போது உடல் அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் ராதாரவி , இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, பாடகர்கள் உன்னி கிருஷ்ணன் ,மாலதி ,நித்திய ஸ்ரீ உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட ராமன் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இருதய நோயால் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடல் உபாதையால் அவதிபட்டு வந்த அவர், அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்கொலைக்கு வேறெதும் காரணம் உள்ளதா ? என அசோக்நகர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாடகி சுவேதா, கானா பாலா, ஆகியோரும் ராமனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பல இசை கலைஞர்களுக்கு லஷ்மன் சுருதி குழு மூலம் ராமனும், லஷ்மனும் வாழ்க்கை அளித்திருப்பதாக தெரிவித்தார்.

அத்தோடு அசோக்நகரிலுள்ள ராமனின் வீட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றார். அங்கு அவர், ராமனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.