AD

விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா


அண்மையில் மும்பையில் இடம்பெற்ற  '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துகொண்டு தனது அப்பா பற்றி நெகிழ்ந்து பேசியிருந்தார்.




அந்த நிகழ்வில் கதிஜா, தன் முகத்தைப் பர்தாவால் முழுதாக மூடியிருந்தார்.  இவ் விடயம்  ஒரு சர்ச்சைக்குரியதாகவும், முகத்தை முழுவதும் மூடியபடி அவர் நிகழ்ச்சிக்கு வந்தது ஒரு பிரச்சனையும் ஆனது.இது  ரஹ்மான் ஒரு பிற்போக்குவாதி, அவர் மகளை வற்புறுத்தி இப்படி செய்யச் சொல்லியிருக்கிறார் என சமூகவலைதளங்களில் இவ்விடயம்
பரவலாக தொடங்கியது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கதிஜாவும், ரஹ்மானும் தங்கள் விளக்கங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

கதிஜா தனது பேஸ்புக் தளத்தில், ``நானும், அப்பாவும் மேடையில் பேசிக்கொண்டது இவ்வளவு பரவலாக பேசப்படுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அதேசமயம், நான் அணிந்திருந்த முகத்திரை
என் தந்தையின் வற்புறுத்தலாலே நடந்தது என்றும், அவர் உள் ஒன்று புறம் ஒன்று என இரட்டை நிலைகொண்டவர் என்ற பேச்சுகளையும் ஆங்காங்கே காண முடிந்தது. நான் உடுத்தும் உடையோ அல்லது என்
தோற்றமோ, நான் என் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்கோ எனது பெற்றோர்களுக்கு துளியும் சம்பந்தம் கிடையாது. நான் முழுமையாக ஏற்று, பெருமையுடனும் சுய விருப்பத்துடன்தான் பர்தாவை
அணிந்திருக்கிறேன். எனக்கு எது வேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எது அணிய வேண்டுமென்ற சுதந்திரம் இருக்கிறது. அதைத்தான்
நானும் செய்திருக்கிறேன். விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்" எனப்பதிவிட்டிருந்தார்.

அதே நேரம்  ஏ.ஆர். ரஹ்மான்  முதன்முதலாக தனது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி இருக்கும் அவரது குடும்ப புகைப்படத்தையும் அவரது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.