AD

காப்பாற்றுப்பட்ட காப்பான்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த, ‛காப்பான்' படத்துக்குத் தடை கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர்கள் சூர்யா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த, காப்பான் படத்தை, லைக்கா நிறுவனம், தயாரித்துள்ளது.

படத்தை வெளியிடத் தடை கோரி, சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த, ஜான் சார்லஸ் என்பவர்  மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

நான், சரவெடி என்ற தலைப்பில், கதையை உருவாக்கினேன். விவசாயத்தைக் கருவாக வைத்து, கதை உருவாக்கப்பட்டது. 

 விவசாயம், நதி நீர் பங்கீடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் நோக்கம். இக் கதையை, பதிவு செய்துள்ளேன். கதை பற்றி, இயக்குநர், ரவிகுமாரிடம் தெரிவித்துள்ளேன். இயக்குனர், கே.வி.ஆனந்தை, 2017 ஜனவரியில் சந்தித்து, கதை பற்றி விவாதித்தேன். அவரும், பயன்படுத்திக் கொள்வதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில், காப்பான் படத்தின் காட்சிகள் சிலவற்றை பார்க்க நேர்ந்தது. என் கதையை அப்படியே, காப்பி அடித்துள்ளனர். இது, பதிப்புரிமையை மீறிய செயல். என் அனுமதி பெறாமல், கதையை பட மாக்கியுள்ளார். எனவே, படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காப்பான் படத்தின் கதையும், சரவெடி என்ற தலைப்பில் உருவான கதையும், வெவ்வேறானவை. மனுவைத், தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.