AD

2 வாழைப்பழம் ரூ.442, பில் : ஓட்டலுக்கு ரூ.25,000 அபராதம்


இரண்டு வாழைப் பழங்களை, 442 ரூபாய்க்கு விற்பனை செய்த, ஐந்து நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழில், கமல்ஹாசன் நடித்த, விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்தவர், ஹிந்தி நடிகர், ராகுல் போஸ். இவர், சமீபத்தில், யூனியன் பிரதேசமான சண்டிகரில், நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.அங்கு அவர், இரண்டு வாழைப்பழங்களை வாங்கியதற்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியையும் சேர்த்து, 442 ரூபாய்க்கு, ஓட்டல் நிர்வாகம் பில் கொடுத்தது. இதை பார்த்து, ராகுல் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக, சமூக வலைதளமான, டுவிட்டரில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், தான் தங்கியிருக்கும் ஓட்டல் அறையையும், வாழைப் பழங்களுக்கான பில்லையும் காட்டி, இதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். பழங்கள் சாப்பிடுவதால் தீங்கு ஏற்படாது என யார் சொன்னது என, பதிவிட்டிருந்தார்.அந்த வீடியோவை, சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தனர்; ஓட்டல் நிர்வாகம் குறித்து கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இதையடுத்து, சண்டிகரை சேர்ந்த கலால் மற்றும் வரிவிதிப்புத்துறை அதிகாரிகள், நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். அங்கு, ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான வாழைப்பழத்திற்கு, கூடுதல் தொகை விதித்து, அதற்கு, ஜி.எஸ்.டி.,யும் வசூலித்ததற்காக, ஓட்டலுக்கு, அதிகாரிகள், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.