AD

ஞானசம்பந்தனின் யூ டியூப் சேனல்!நயன்தாராவுக்கு அப்பாவாக `தளபதி 63' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், கு.ஞானசம்பந்தன். சினிமா அனுபவம் குறித்தும், தனது யூ டியூப் சேனல் குறித்தும் பேசியிருக்கிறார்.

`தளபதி 63' படம், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தற்போதையை அரசியல் சூழல்... கு.ஞானசம்பந்தனிடம் பேச ஆயிரம் விஷயம் இருக்கிறது. ஆனால், `இப்போதைக்கு என் யூ டியூப் சேனல் பற்றிப் பேசுவோம்' என ஆரம்பித்தார், கு.ஞானசம்பந்தன்.

`2010-ம் வருடம் என்று நினைக்கிறேன். செல்போன் புழக்கத்தில் வந்த நேரம். கமல் என்னிடம் ஒருவருடைய தொடர்பு எண்ணைக் கேட்டிருந்தார். `நான் சொல்கிறேன், அப்படியே குறித்துக்கொள்கிறீர்களா?' என்றேன். `அதெல்லாம் எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை நாள்கள்தான் போன் பற்றித் தெரியாமல் இருப்பீர்கள். என்ன செய்வீர்களோ தெரியாது. நீங்களே எனக்கு அனுப்பி வைக்கிறீர்கள்' என்று போனை வைத்துவிட்டார். எனக்கு உண்மையில் டிஜிட்டல் சம்பந்தமான விஷயங்களெல்லாம் அவ்வளவாகத் தெரியாது. அதனால், அது சம்பந்தமான விஷயங்களில் எனக்குக் குழப்பம் இருந்தது. 

நண்பர் கமல் அப்படிச் சொல்லிவிட்ட பிறகு, எப்படி அனுப்பாமல் இருப்பது?! பழகிக்கொண்டு அனுப்பினேன். அவரைத் தவிர, செல்போனில் இருந்த மற்ற ஐம்பது பேருக்கும் அந்த எண் தவறுதலாகப் போய்விட்டது. பிறகு அவரே அழைத்து, `என்னைத் தவிர எல்லோருக்கும் அனுப்பியிருக்கீங்க. இருந்தாலும் பரவாயில்லை. இப்போது எனக்கு அனுப்புங்கள்' என்றார். அப்படித்தான் எனக்குப் பழக்கமானது, டிஜிட்டல் உலகம். அவரின் வழிகாட்டுதலினால்தான், இப்போது வீட்டில் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறேன்.'' என்கிறார், கு.ஞானசம்பந்தம். 

``கமலின் வற்புறுத்தலால்தான், ஒன்றரை வருடமாக யூ டியூப் சேனலை நடத்துறேன். என் அனுபவங்களை அதில் பகிர்கிறேன். கேள்வி - பதில், வைகறைச் சிந்தனை எனப் பல விஷயங்கள் அதில் இடம்பெறுகின்றன. நான் பேசும் பட்டி மன்றங்களும் அதில் இடம்பெறுகின்றன. எனது தங்கை மகன்தான் முழுமையாக அதைக் கவனித்துக்கொள்கிறார். இலக்கியம், திரைப்படம் எனப் பல விஷயங்களும் அதில் இடம்பெறுகிறது. ஒரு தமிழ் வாத்தியார் யூ டியூப் நடத்துவது இதுதான் முதல் முறையாக இருக்குமென நினைக்கிறேன். தமிழாசிரியர் அறிவியல் துறைக்கு வரவேண்டும் என்ற நண்பர் கமல்ஹாசனின் விருப்பம் இதன்மூலம் நிறைவேறியிருக்கிறது. அவர் எனக்கு ஆத்மார்த்தமான நண்பராக மட்டுமல்லாமல், நல்ல வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

``எப்போதும்போல இப்போதும் பல நாடுகளுக்குச் சென்று பட்டி மன்றங்களில் பேசி வருகிறேன். 5000-க்கும் மேற்பட்ட கூட்டத்தில் பேசினாலும், அவருக்கு மேடையிலேயே போன் செய்ய மறந்ததில்லை. பெரும்பாலான பட்டிமன்றங்களில் கமல்ஹாசனுக்கு போன் போட்டு, ரசிகர்களுக்கு `ஹலோ' சொல்ல வைப்பேன். அவர் சொல்லும் அந்த `ஹலோ' என்கிற குரல், அந்தப் பட்டிமன்ற அரங்கத்தையே அதிரவைத்துவிடும். கைதட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடிக்கும். `நிழலாகச் செய்ததை நிஜமாகச் செய்யத்தான் அரசியலுக்கு வர்றேன்' என `உன்னால் முடியும் தம்பி' படத்தில் பாடல் வரி வரும். அந்தப் படத்தில் உதவி செய்வதைப்போல நடித்தேன். அதை ஏன் உண்மையில் செய்யக்கூடாது என்பார். இப்போது, அரசியலில் இறங்கியிருக்கிறார் கமல். மக்களுக்காகக் கண்டிப்பாக உழைப்பார்." என்றவர், `தளபதி 63' பட அனுபவத்தையும் சொன்னார். 

``விஜய் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவர். அவருடன் நடிப்பது நல்ல உணர்வைக் கொடுத்தது. அடுத்தது, முதல் முறையாக நயன்தாரா நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். அதுவும் பாசிட்டிவான விஷயம். நான் பல கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். 

நயன்தாரா என்ற பெயரைச் சொன்னாலே அப்படி ஒரு கைதட்டல் வரும். பல பெண்களை அவர் கவர்ந்திருக்கிறார். அவ்வளவு பெரிய பெயரும், புகழும் இருந்தாலும், எளிமையாகப் பழகக்கூடியவர். அவர் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் மட்டுமல்ல, `இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்காராவின் `சூர்யா 38' படத்திலும் நடிக்கிறேன்.'' என்று உற்சாகமாக முடித்தார், கு.ஞானசம்பந்தன்.

#KamalHaasan #TamilCinemaKing #தளபதி 63