AD

கனடா குடியுரிமையை இரத்துச் செய்தார் பிரபல நடிகர்

பிரபல பொலிவூட் நடிகரான அக்‌ஷய் குமார் கனடா நாட்டை சேர்ந்தவர். இவர் இந்தியர் கிடையாது என்ற சர்ச்சை தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்‌ஷய்குமார் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

குறிப்பாக நாட்டுப்பற்று இருக்கும் வகையில் பல படங்களில் இவர் நடித்தாலும், அவரை கனடா நாட்டுக்காரர் எனவும் இந்தியன் கிடையாது என்றும் இணையத்தில் சிலர் கூறி வந்தனர்.

அதுமட்டுமின்றி, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்‌ஷய்குமார் வாக்களிக்கவில்லை. அதற்கு அவர் கனடா குடியுரிமை வைத்திருப்பதே காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் அக்‌ஷய் குமாரோ, என்னிடம் கனடா குடியுரிமை இருப்பதை நான் எப்போது மறைக்கவோ மறுக்கவோ இல்லை. இருப்பினும் நான் கடந்த 7 வருடங்களாக கனடாவுக்கு செல்லவில்லை என்பது தான் உண்மை. நான் இங்குதான் பணியாற்றுகிறேன். இந்தியாவில்தான் வரி செலுத்துகிறேன். யாருக்கும் என் நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அக்‌ஷய்குமார் தற்போது, கனடா குடியுரிமையை இரத்துச் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில், 

தொடக்கத்தில் நான் நடித்த 14 படங்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்தன. இதனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன். அப்போது கனடாவில் உள்ள என் நெருங்கிய நண்பர், என்னை அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுக் கொள்ள அங்கு வரும்படியும் நாம் இருவரும் சேர்ந்து பணி செய்யலாம் என்று கூறினார்.

அப்போது தான் என்னுடைய 15ஆவது படம் வெற்றியடைந்ததால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. அதன் பின்னர் கனடா செல்வது பற்றி நான் நினைத்துக் கூட பார்த்தில்லை, இந்திய கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை.

இப்போதுதான் இந்திய கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளேன். கடவுச் சீட்டை வைத்துத்தான் நான் இந்தியன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதை நினைக்க மிகவும் வருத்தமாக உள்ளது. நான், என் மனைவி, குழந்தைகள் அனைவருமே இந்தியர்கள்தான் என்று கூறினார்.