AD

சினிமாவுக்கு எதிராக சாட்டை சுழற்றிய லெனின் பாரதி


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறந்த திரைப் படத்திற்கான விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், 'பரியேறும் பெருமாள், ' மேற்கு தொடர்ச்சி மலை', 'காலா' உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் திரைப்பட இயக்குநர்களான மாரி செல்வராஜ், லெனின் பாரதி, நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய லெனின் பாரதி, சமூகப் பிரச்னையை மையமாக வைத்துப் பேசினார்.

அவர் பேசியதாவது: சமீபத்தில், சென்னை, கீழ்பாக்கத்தில், பேருந்தில் கத்தியுடன் அலைந்த கல்லூரி மாணவர்களை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அவ்வளவு பேருக்கும் ஒரே மாதிரியாக கையில் அடிப்பட்டிருக்கிறது. போலீஸ் நிலையத்தில் இருக்கும் கழிவறையில் வழுக்கி விழுந்து, அவர்கள் அனைவரின் கைகளும் முறிந்து, அவர்கள் கட்டுப் போட்டு இருக்கின்றனர். ஒவ்வொருவரின் கையிலும் கட்டு. ஒரே இடத்தில் கை முறிவு.

எளிய மக்கள் தவறு செய்யும்போது தான், கழிவறை வழுக்குகிறது, வசதி படைத்தவர்கள் தவறு செய்யும் போது, கழிவறை வழுக்குவதில்லை; நன்றாக இருக்கிறது. மாணவர்கள் கத்தியோடு அலைகிறார்கள் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், சினிமாவின் பாதிப்புதான் எல்லாமே. அங்கிருந்துதான் மாணவர்கள் தூண்டப்படுகின்றனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை காட்சியாக்கி சினிமாவில் காட்டுகின்றனர். அதைப் பார்க்கும் மாணவர்கள், இதுபோன்று நாமும் செய்யலாம் என கத்தியைத் தூக்குகின்றனர். இந்த விஷயத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக இருப்பவர்கள், இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கும் நடிகர்களும்; காட்சிகளை அமைக்கும் இயக்குநர்களும்தான். அவர்கள்தான், கழிவறைகளில் வழுக்கி விழ வேண்டும்; அல்லது, வழுக்கி விழ வைக்கப்பட வேண்டும். கத்தி எடுக்கும் கலாசாரத்தை தூண்டி விடுவது சினிமா தான். காசுக்காக எதையும் செய்வேன் என்று சொல்லி, கொஞ்சம் கூட சமூக அக்கறையில்லாமல் யார் இருந்தாலும், அவர்கள் தான் முதல் குற்றவாளி.

இவ்வாறு அவர் பேசினார்.

இவரின் இந்தப் பேச்சு, சினிமா வட்டாரங்களில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.