AD

பா.ரஞ்சித் கைது செய்யப்படுவாரா?

ராஜராஜ சோழன் குறித்து அவதூறாகப் பேசியதாக இயக்குநர்  பா. ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர் மன்னர் ராஜராஜசோழன். அவரது ஆட்சியிலிருந்துதான்  ஜாதி பிழவு, தேவதாசி முறை ஆகியவை கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்கள்  ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவருடைய ஆட்சிதான் இருப்பதிலேயே  இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்' என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.
பா. ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர்.  #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டாக்கை கொண்டு பலரும் ரஞ்சித்துக்கு எதிரான கண்டனத்தைப் பதிவிட்டு  வந்தனர். இதையடுத்து  ராஜராஜன் சோழன் பற்றி தவறாக  பேசியதாக இயக்குநர்  பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜராஜசோழன் பற்றி அவதூறாகப் பேசியதாக இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்  போலீசார்  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து  ரஞ்சித்  மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்த ஹெச். ராஜா,  'மாமன்னர் ராஜராஜ சோழனை இழிவாகப் பேசியுள்ள பா. ரஞ்சித்தின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திக தலைவர் கி.வீரமணியை அடுத்து இன்று இவர். இவர்கள் அனைவருமே ஜோஷ்வா மதமாற்றும் திட்டத்தின் கையாட்கள். இவர்கள் அனைவரின் குறிக்கோள் தமிழகத்தை கால்டுவெல் மண்ணாக்குவதே' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

#Rajarajachola #Director #Pa.Ranjith #Kollywoodnews #Policecase #Tamilcinemaking