AD

ஆச்சியின் அசாத்திய சாதனை..!!!

ஃபில்ம் ரோல் இல்லாமல்கூட 80களில் தமிழ்ப்படம் எடுத்திருக்கமுடியும், ஆச்சி என்னும் மனோரமா இல்லாமல் முன்னணி ஹீரோக்கள்  படம் எடுத்திருக்கவே முடியாது. அக்காலத்தில் எந்த‌ ஒரு குறிப்பிட்ட‌நடிகரும் எத்தனை ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் என்பதை அறிய, அவரவர் தனித்தனி வரலாறை புரட்ட தேவையில்லை. எத்தனை படத்தில் மனோரமா இருந்திருக்கிறார் என்று பார்த்தாலே போதும். மனோரமா நடித்தாலே ஹிட் அடிக்கும் என்பதல்ல, ஆனால் ஹிட் அடித்த படங்களில் எல்லாம் மனோரமா இருந்திருக்கிறார் என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.
இவருடைய இடத்தை எவராலும் நிரப்பமுடியாது’ என்று சொல்லுவதற்கு, எல்லாத்துறைகளிலும் ஒருசிலர் இருப்பார்கள். இப்போது இல்லாமல் போய்விட்டிருந்தாலும்கூட, அவரின் அளப்பரிய திறமைகளும் சாதனைகளும் விண்ணும் மண்ணும் உள்ளவரைக்கும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். திரைத்துறையில் அப்படியான ஆட்சி செய்தவர்... ஆச்சி. இப்படித்தான் மனோரமாவை எல்லோரும் அன்புடன் சொல்வார்கள்.
ஆச்சியின் இயற்பெயர், கோபி சாந்தா. அவரின் குழந்தை பருவம் வறுமைக்கு வாக்கப்பட்ட மிக மோசமான காலம். முழுப்பசிக்கு சாப்பிட்ட நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றே சொல்லலாம். தந்தை இல்லை. அம்மாதான் எல்லாமும். சோழ தேசம் ராஜமன்னார்குடிதான் பூர்வீகம். ஆனாலும், பிழைக்க சென்ற  இடம் செட்டிநாட்டின் பள்ளத்தூர்.
அந்த சின்னஞ்சிறிய ஊரின் ஓர் தெருமுனையில், பலகாரம் சுட்டு விற்றார் ஆச்சியின் அம்மா. செட்டி வீட்டில் பத்துப்பாத்திரம் தேய்த்தார். அங்கே காதில் விழும் பாட்டுகளும், கோயில் திருவிழாவில் நடைபெறும் வள்ளி திருமணம் முதலான நாடகங்களும்தான் கோபி சாந்தாவின் பெருந்தீனி. அந்தப் பாடல்களைப் பாடுவார். பாடிக்கொண்டே இருப்பார். ஓடிவந்து நின்று, ஒய்யாரமாகப் பார்த்து, தலையை லேசாகத் திருப்பி, மெல்லச் சிரித்து, வெட்கப்பட்டு, பிறகு ஆவேசமாகி, அழுது, கண்ணீர்விட்டு... என அந்தப் பலகாரக் கடையில் பாதி பலகாரம் சாப்பிடவும், மீதி கோபி சாந்தா எனும் சிறுமியின் நடிப்பைப் பார்க்கவுமே ஏராளமானவர்கள் வந்தனர் எனலாம்.
அந்த ரசிகர் கூட்டங்களின் விமர்சனத்தால், உள்ளூர் டிராமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் அசத்தியவரைக் கண்ட கவியரசர் கண்ணதாசன், ‘இந்தப் பொண்ணுகிட்ட ஏதோ இருக்குதே. நிச்சயம் பெரியாளா வருவா’ என்று உறுதிபட நினைத்தார். பிறகு, தன் நிறுவனம் தயாரித்த படத்தில் வாய்ப்பும் வழங்கினார். அவரின் திறமையால் மெல்ல மெல்ல வளர்ந்தார். எவரும் தொடமுடியாத இடங்களையெல்லாம் தொட்டார், சிம்மாசனமிட்டார். கோபி சாந்தா இருந்தவர் மனோரமாவான கதை இப்படித்தான்.
பின்பு ஒருவரை காதலித்து அவரையே கரம்பிடித்தார். ஆனால், இல்லற வாழ்க்கையில் நிம்மதியும் காணாமல் போனது. அம்மாவைப் போலவே ஒற்றை மனுஷியாய் தன் பிள்ளைகளை வளர்த்தார். இத்தனைக் காயங்களுக்கும் வலிகளுக்கும் நடுவேதான் நமக்காக, நாம் சிரிப்பதற்காக காமெடி செய்தார் மனோரமா. அந்தக் காலத்தில், எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களாக இருந்தாலும் சரி, ஜெமினி, முத்துராமன் படங்களாக இருந்தாலும் சரி... ’நாகேஷ், மனோரமா கால்ஷீட்டை எப்படியாவது வாங்கிருங்க’ என்று படத்தின் கதை முடிவாகும்போதே முடிவு பண்ணிவிடுவார்கள். நாகேஷ், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி என காமெடியில் மிகப்பெரிய ரவுண்டு வந்தார். ஒருகட்டத்தில், குணச்சித்திர நடிகையாகவும் அடுத்த கட்டதிற்கு  சென்றார். கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என எண்பதுகளின் நாயகர்களுக்கு இவர் அம்மா என்றால், அங்கே காமெடியும் உண்டு; சென்டிமென்டும் நிச்சயம்! சின்னதம்பி’யிலும், ‘கிழக்கு வாசல்’ படத்திலும், ‘சின்னக்கவுண்டர்’ படத்திலும் இவரின் பிரமாண்ட நடிப்பு கண்டு மலைத்துதான் போனது ரசிகக் கூட்டம்.

கொங்கு பாஷையாகட்டும், சென்னை செந்தமிழாகட்டும், மதுரை வட்டார மொழியாகட்டும், அத்தனை வட்டார மொழியையும் அச்சுஅசலாக பேசுவதற்கு மனோரமாவிற்கு இணையாக ஒரு நடிகையை சுட்டிகாட்ட முடியாது. காமெடி கதாபாத்திரம் ஏற்றால், சிரிக்கவைக்காமல் போகமாட்டார். அம்மா/பாட்டி சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தால் உருகவைக்காமல் விடமாட்டார். எத்தனை படங்கள்? எத்தனை நடிகர்கள்? எத்தனை முதலமைச்சர்கள்? சிவாஜி, எம்ஜிஆர். தலைமுறையில் இருந்து, ரஜினி கமலின் 80களிலும், விஜய் அஜீத் என 90கள், அட இவ்வளவு ஏன் தனுஷ் சிம்பு தலைமுறைவரை எல்லாருக்கும் ஆச்சியாக இருந்தவர்.
சினிமா என்றாலே ஆண்கள் கோலோச்சுவது அன்றும் இன்றும் புதிதான செய்தியல்ல. ஆனால், நான்கைந்து தலைமுறை நடிகர்கள் அனைவரின் மரியாதையையும் ஒருங்கே பெற்ற மற்றொரு நடிகை தமிழில் இல்லை. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, இவ்வளவு ஏன் சிங்கள் ஆறு மொழிகளில் பேசி நடித்திருக்கிறார்.கவியரசர் கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்டு சினிமாவுக்கு அறிமுகப்படுத்த மனோரமா மாதிரி அவ்வளவு  கேரக்டரையும் பண்ண வேணாம். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் ஜில்ஜில் ரமாமணி கேரக்டரை, மனோரமாவைவிட வேற யாராவது சிறப்பாகப் பண்ணிட முடியுமா? வெளுத்து வாங்கியிருப்பார் மனோரமா’’ என்று சிவாஜி கணேசனே வியந்து, புகழ்ந்து, மகிழ்ந்திருக்கிறார். அதனால்தான், அந்தப் பண்பட்ட நடிப்பால்தான்... ‘பொம்பள சிவாஜி’ என்று புகழப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஆச்சி மனோரமா. நேற்று  ஆச்சியின் பிறந்த நாள் (மே 26). இந்த நாளில் அவரை நினைவுகூர்வோம். அவரின் திறமையை, அசாத்திய சாதனையை நினைத்துப் பூரிப்போம்!

#Aachi #Manorama #AachiManorama #Birthday #BirthdayMay26 #5000StageShows #60YearsActing #Tamilcinemaking