AD

'கோமாளி' ட்ரெய்லரில் ரஜினி தொடர்பான சர்ச்சை

'கோமாளி' ட்ரெய்லரில் உள்ள ரஜினியைக் கிண்டல் செய்திருப்பது தொடர்பான காட்சிக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோமாளி'. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. 

நேற்று (ஆகஸ்ட் 3) மாலை ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டுவிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் கலந்து கொண்டார். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன், அவரிடம் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “நாங்களும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்த வழக்கு போகிற நிலைமையைப் பார்த்தால், அது நடக்கவே நடக்காது எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தத் தேர்தலை நடத்தியிருக்கவே கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். செயற்குழுக் கூட்டம் ஒன்று நடந்தது. அது முடிந்து 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். 

அதுவும் நடத்தாமல் அதிலிருந்து 2 மாதங்கள் தள்ளி ஒரு செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதற்குப் பிறகு தான் தேர்தல் தேதி அறிவித்துள்ளனர். அந்த செயற்குழுக் கூட்டமே தவறு. எப்படிக் கூட்டினீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் சங்கம் பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வழக்கு ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார் ஐசரி கணேஷ்.

அவரிடம் ட்ரெய்லரில் வெளிப்பட்டுள்ள ரஜினி கிண்டல் தொடர்பான கேள்விக்கு, "'கோமாளி' படத்தின் தயாரிப்பாளராகிய நானே தீவிரமான ரஜினி ரசிகன். அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான் அக்காட்சியை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.