AD

சிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்

தமிழ்த் திரையுலகில் உள்ள மூன்று முக்கிய சங்கங்கள் தற்போது கடும் சிக்கலில் சிக்கித் தவித்து வருகின்றன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆகியவைதான் அந்த மூன்று முக்கிய சங்கங்கள்.
விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சரியில்லை என அவருக்குப் பிடிக்காத சிலர், அரசு ஆதரவுடன் அந்த நிர்வாகத்தை நீக்கிவிட்டு அரசு அதிகாரியை நியமிக்க வைத்தனர். அரசு அதிகாரி செயல்படுகிறாரா இல்லையா என்று தெரியாத அளவிற்கு சங்கத்திற்கு ஆலோசனைக் குழுவாக நியமிக்கப்பட்டவர்கள் நாளுக்கு ஒரு மீட்டிங்கை நடத்திக் கொண்டு தங்களது இருப்பைக் காட்டி வருகிறார்கள். சினிமா சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்காமல் விளம்பரத்திற்காகவும், மீடியாக்களில் செய்திகள் வருவதற்காகவுமே அவர்கள் செயல்படுபவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாசர் தலைமையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கத்திற்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது என நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. அந்தத் தடையை நீக்க வேண்டும் என செயலாளல் விஷால் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்ட பின்னும் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், அந்த சங்கமும் செயல்படாத நிலையில் உள்ளது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு அடுத்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக வேட்பு மனு தாக்கலில் பிரச்சினை ஏற்பட்டு, இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் உள்ளிட்டோர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டனர். அதற்கு முன்னதாக பாரதிராஜா போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த இயக்குனர்கள் சங்கத் தேர்தலிலும் தற்போது பிரச்சினைகளும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்கள் அதிக வசூலைக் குவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், தின்பண்டக் கட்டணம் என பல பிரச்சினைகளே தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் இருக்கக் காரணமாக இருக்கிறது. அந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் முக்கிய சங்கங்கள் அவர்களுக்குள் இருக்கும் அரசியலால் மோதிக் கொண்டிருக்க, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற யார் வரப் போகிறார்கள் என்பது தெரியாமலேயே சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பல இளம் திறமைசாலிகள் பல கனவுகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.