AD

வாக்காளர்களுக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்!





பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் நடிகர் விஜய்சேதுபதி, தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். 

விஜய்சேதுபதி நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதையொட்டி நடிகர் விஜய்சேதுபதி நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது:-

திருநங்கை வேடம் என்பதால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கவில்லை. அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நடித்தேன். அது அழகாக எழுதப்பட்ட கதை. 

திருநங்கையாக நடித்தபோது பெண்களின் மீதான மதிப்பு எனக்கு அதிகரித்தது. அந்த வேடத்தில் வீட்டுக்கு வந்த என்னை பார்த்து என் மகள் ஸ்ரீஜா அழுதுவிட்டாள்.

சினிமாவில் நான் யாருக்கும் போட்டி இல்லை. நடிக்க வரும்போது நடித்தால் மட்டும்போதும் என்று நினைத்தேன். இங்கு வந்தபோது வியாபாரம் நம் எண்ணத்தை மாற்றி விடுகிறது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இளம்பெண் நியாயத்துக்காக போராடுவது வேதனையாக இருக்கிறது. அந்த பெண்ணின் குரலை 10 வினாடிகள் கூட நம்மால் கேட்க முடியவில்லை. 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ரசிகர்களும், பொதுமக்களும் அரசியலை விட்டு விலகக்கூடாது. அரசியல் சாக்கடை என்று தவறாக சொல்லி விட்டார்கள். 

சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதோடு நிற்க வேண்டாம். நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் அதை தெரிவிப்பதற்கு தேர்தல் உள்ளது.

எனவே அனைவரும் வாக்களித்து  நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலிருந்து யாரும் விலகக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.

#VijaySethupathi #Super #Deluxe #TamilCinema