AD

நல்ல மாப்பிள்ளை பாருங்கள் - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தமன்னா



வேலூரில் நகை கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா பங்கேற்றார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அண்ணா சாலையில் குவிந்தனர். ரசிகர்கள் முண்டியடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆரணி சாலை வழியாக போக்குவரத்தை போலீசார் மாற்றி விட்டனர்.

இதைத் தொடர்ந்து தமன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நான் நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் வெளியாகிறது. இதை அடுத்து ‘தேவி 2’, ‘மகாலட்சுமி’ உள்பட பல படங்கள் வெளியாக உள்ளது. நல்ல படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உண்டு. மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிச்சயம் அந்த படம் ஓடாது. சினிமாவில் எனக்கு போட்டியாக யார் உள்ளார்கள் என்று கேட்டால், எல்லா துறைகளிலும் போட்டி உள்ளது. அதுபோல் தான் சினிமாவும். போட்டி நல்லது தான். போட்டி காரணமாக தான் நாங்கள் நல்ல படங்களில் நடிக்க முடிகிறது.

பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன். அதை ஓரளவுக்கு தர்மதுரை படம் நிவர்த்தி செய்துள்ளது. இனி வெளியாகும் படம் இன்னும் அதை ஒரு படிக்கு மேல் கொண்டு போகும். அரசியல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எப்போது எனது திருமணம் என்று கேட்கிறார்கள். நீங்களே எனக்கு நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்றார்.விழா முடிந்ததும் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி, தமன்னாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் பொதுமக்கள் மற்றும் உங்களது ரசிகர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனம் ஓட்ட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

அதை ஏற்றுக்கொண்ட தமன்னா, வெளியே வந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், சீட் பெல்ட் கட்டாயம் போட வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம் என்றார். பின்னர் அவர் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.