AD

இளையராஜாவை கிண்டல் செய்த கங்கை அமரன்


இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை கல்லூரிகள் கொண்டாடி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகள் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அவரும் விழாக்களில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியும், பாடி, இசையமைத்தும், தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்த இளையராஜா, இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று தெரிவித்ததாக செய்தி பரவியது. இது சர்ச்சையானது.

இதற்கு இயக்குனரும் இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கைஅமரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலை பதிவிட்டார்.

இளையராஜா தெரிவித்ததை அப்படியே பதிவிட்டுள்ள அவர் தன்னுடைய பதிவாக, ’மன்னிக்கவும், நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இளையராஜா பேசியதன் முழு வீடியோ வெளியாகி அவர் அந்த பொருளில் சொல்லவில்லை என்பது தெரிய வந்தது. இதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் கங்கை அமரனின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் விமர்சனங்களை பதிவிட தொடங்கினார்கள். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘நானாவது அண்ணனை மிஞ்சுவதாவது. நானும் அண்ணனும் இப்படி அடிக்கடி கிண்டல் செய்து பேசிக்கொள்வோம். அவர் எனக்கு அண்ணன் மட்டும் இல்லை. அம்மா’ என்று கூறி இருக்கிறார்.